திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஜனவரி 5 ஆம் தேதியான இன்று திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். துணை பொது செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் கனிமொழியின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட செயல்களை செய்து தங்கள் பலத்தை காட்ட கனிமொழியின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
வழக்கம் போல கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து போஸ்டர்கள், பேனர்கள், சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் என களைக்கட்டியுள்ளது. அந்த வகையில் கனிமொழி துணை பொது செயலாளராக வருவதற்கு முன்பு வகித்து வந்த மாநில மகளிர் அணி செயலாளர் பதவியில் கன்னியாகுமரியின் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டார். அதற்கு நன்றி தெரிவித்து அவரும் கனிமொழியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அணி பிரமுகர் அம்மு ஆன்றோ ஏற்பாடு செய்த கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி படம் பொறித்த சேலைகள் குறித்த புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.