குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீதும் வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


சிக்கிய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி:


கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் அருகே அமைந்திருந்த குடோன் ஒன்றில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தமிழ்நாட்டில் குட்கா விற்பனைக்கு இருந்த தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரங்கள் இருந்தது தெரியவந்தது. 


இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், எஸ்.பி. விமலா, கலால்துறை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.


இந்த ஆவணங்களின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக, டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவியிலிருந்த போதே அவரின் வீட்டுக்கு சென்று சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு சி.பி.ஐ. எழுதிய கடிதத்தில், குட்கா முறைகேடு வழக்கு சமுதாயத்தில் சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் உள்ளதால், அதன் முக்கியத்துவத்தை கருதி தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததாக கூறப்பட்டது.


வலையை விரிக்கும் சிபிஐ:


மேலும், மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதால் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், குட்கா வியாபாரி மாதவராவ், கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் இருந்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் அனுமதி கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய புலனாய்வுத்துறைக்கு (சிபிஐ) தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதனால், மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்தது.


சமீபத்தில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் மீதும் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.