Group 1 Exam: குரூப்-1 பதவிகளில் 92 பணியிடங்கள் காலியாக உள்ளதாக,  கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி காலியாகவுள்ள, 18 துணை ஆட்சியர்கள், 26 துணை காவல் ஆணையர்கள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர் மற்றும் 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வுகள், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.


92 பணியிடங்களுக்கான இந்த தேர்வை மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் எழுதவுள்ளனர். தேர்வுக்காக பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. 


முன்னதாக, தீபாவளி பண்டிகையை ஒட்டி  சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக, கடந்த மாதம் 25ம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும்  விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில், இன்று (நவ.19) தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.


இதனால், இன்று நடைபெற உள்ள குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கண்காணிப்பு பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பல பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால்,  வகுப்புகள் நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக, சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இன்று குரூப்-1 முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, வினாத்தாள் குளறுபடியால் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேவையும் சென்னை பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.