சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்களில் மெரினாவும் ஒன்றாகும். இந்த நிலையில், இன்று இரவு சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள காமராஜர் சாலையில் வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் இயங்கி வந்தது.


கடற்படை பேருந்து :


இந்த நிலையில், கடற்படை அதிகாரி சிவா ரெட்டி அவரது மனைவி லலிதாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். லலிதா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இவர்கள் இருவரும் பல்லவன் சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இன்று மாலை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.


அப்போது, மாநில கல்லூரி அருகே வந்தபோது இவர்களது பின்னால் கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது, அந்த பேருந்து எதிர்பாராதவிதமாக சிவா ரெட்டி மற்றும் லலிதா சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அப்போது, லலிதா மற்றும் சிவா ரெட்டி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது, இவர்கள் மீது மோதிய பேருந்து நிற்காமல் தவறி விழுந்த கர்ப்பணிப் பெண் லலிதா மீது ஏறியது.


கர்ப்பிணி பெண் பலி : 


பேருந்து சக்கரத்தில் சிக்கிய லலிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், சிவா ரெட்டி அதிர்ச்சியடைந்தார். அதேசமயத்தில், குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று லலிதாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், குழந்தையும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கியதுடன் பேருந்தை ஓட்டிய ராகேஷ்குமாரையும் தாக்கியுள்ளனர்.


பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராகேஷ்குமாரை கைது செய்தனர். மெரினா கடற்கரையில் ஏற்பட்ட இந்த விபத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.