சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் நடுவில் உள்ள கம்பங்களில் காவல்துறையினரால் ‘நீங்க ரோடு ராஜாவா..?’ என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனர் ஒன்று நெடுதூரம் வைக்கப்பட்டிருந்தது. இது காவல்துறையினரால் ஏன் வைக்கப்பட்டது..? எதற்காக வைக்கப்பட்டது..? என்று குழப்பம் மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது. ஆனால் இந்த பேனர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் ரோடு ராஜா விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதாவது மக்கள் சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றவே இந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேரு வீடியோக்களை பதிவு செய்துள்ளது. அதில் திரையுலக நடிகர்கள் இடம்பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சாலை விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் @RoadRaja என பயன்படுத்தி பதிவு செய்தால் உடனடியாக அந்த நபரை அடையாளம் கண்டு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பை உறுதி செய்ய நேற்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. சாலை விதிமீறல் அல்லது சாலை பாதுகாப்பபு குறைபாடு காரணமாக ஆண்டுதோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகிறது. பலரும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதனால் சாலை பாதுகாப்பை உறுதி செய்ய பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.