பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்களிடையே வெடித்த மோதல். பச்சையப்பன் மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரப்பரப்பு. 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 10 பேரை தேடி வருவதாக ரயில்வே டிஎஸ்பி தகவல்

Continues below advertisement

சென்னை பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் முக்கிய ரயில் நிலையமாக கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பச்சையப்பன் கல்லூரி மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. நேற்று மாலை 3 மணியளவில் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த போது, சென்னை கடற்கரை முதல் அரக்கோணம் வரை செல்லக்கூடிய மின்சார ரயில் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தது. 

 

Continues below advertisement

பச்சையப்பன் கல்லூரி மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்

அந்த ரயிலில் பயணித்து வந்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள், திடீரென பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இந்நிலையில் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றபோது பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் அந்த ரயிலில் ஏறினர். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்த மின்சார ரயில் மீது கற்களை எரிந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையும் பச்சையப்பன் கல்லூரி மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுற்றறிக்கை

இச்சம்பவம் குறித்து ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் கூறுகையில், சென்னையில் பல கல்லூரிகள் இருந்தாலும் இந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் பல முறை எச்சரித்தும் அவர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தாக்குதல் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவர்களையும் கல்லூரியில் இருந்து உடனடியாக நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறியிருந்தார். பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக அளவில் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தை பயன்படுத்தக்கூடிய நிலையில், மாணவர்களின் இந்த மோதலால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. சுமார் 60 மாணவர்களை நீக்குவதற்காக பரிந்துரை சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.