கரூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முறையான அறிவிப்பு மற்றும் சரியான விளக்கம் இல்லாமல் தடுப்பூசி போடப்பட்டதால், தேவையின்றி மக்கள் குவிந்து தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தடுப்பூசி போடும் மையத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. குளித்தலை அரசு மருத்துவமனையில் 50 தடுப்பூசிகளும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 தடுப்பூசிகளும், கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 150 தடுப்பூசிகள், கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டும் 50 தடுப்பூசிகள், அரவக்குறிச்சி பகுதியில் 100 தடுப்பூசிகள், தான்தோன்றிமலை பகுதியில் 100 தடுப்பூசிகள் என மொத்தம் 500 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 150 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சரியான விளக்கம் மற்றும் அறிவிப்பு மக்களுக்கு செல்லாததால் சுமார் 700 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
150 தடுப்பூசி மட்டுமே உள்ள நிலையில் 700 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்ததால், சுகாதார அலுவலர்கள் செய்வதறியாது தடுமாறினர். தடுப்பூசி பற்றாக்குறையை கண்டித்து அங்குள்ள சுகாதார அலுவலர்கள் முற்றுகையிட்ட பொதுமக்கள் அறிவிக்கப்பட்டுள்ள 150 தடுப்பூசிக்கு எத்தனை பேருக்கு டோக்கன் கொடுத்துள்ளீர்கள். இன்றைய (01-06-21) தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள டோக்கன் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, தடுப்பூசி இல்லை முடிந்துவிட்டது என எப்படி கூறுகிறீர்கள்? என சரமாரியாக கேள்வி கேட்டனர்.
முறையான தகவல் மற்றும் வெளிப்படையான அறிவிப்பு இல்லாததால் தேவையின்றி மக்கள் பலர் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர். மேலும், கரூர் நகர பகுதியில் ஒரே இடத்தில் மட்டும் தடுப்பூசி போடுவதால் கூட்டம் அலை மோதுகிறது. இதனை கட்டுப்படுத்த கரூர் நகரில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் தடுப்பூசி போடும் மையத்தை உருவாக்கவேண்டும் என்றும், முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த குறுந்தகவலும் அனுப்பப்படுவதில்லை எனவே, இது மக்கள் மத்தியில் அதிருப்தியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது எனவே, தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.