தமிழ் கடவுளாக மக்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் கந்த சஷ்டி என்பது மிகவும் முக்கியமான நாள் ஆகும்.
மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு பட்சங்களிலும் சஷ்டி திதி வருவது வழக்கம். இந்த நன்னாளில் முருகன் கோயில்களில் பக்தர்கள் அலைமோதுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் சஷ்டி வந்தாலும், ஐப்பசி மாதம் வரும் சஷ்டியே கந்த சஷ்டி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி மாதம் வரும் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை தொடங்கி சஷ்டி திதி வரும் ஆறு நாட்களும் மகாகந்த சஷ்டி விழாவாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த ஆறு நாட்களும் முருகன் கோயில்களில் பக்தர்கள் திரளாக குவிந்து வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.
எப்போது?
நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 7ம் தேதி நிறைவடைய உள்ளது. நவம்பர் 2ம் தேதி கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்றைய நாள் அதிகாலை 4.30 மணிக்கே பூஜை தொடங்கும்.
முருகனுக்கு உரிய 16 திதிகளில் ஆறாவதாக வரும் திதி சஷ்டி திதி. விசாக நட்சத்திரத்தில் முருகன் தோன்றியிருந்தாலும் சூரனை முருகன் வதம் செய்தது சஷ்டி திதியிலே ஆகும். இதன் காரணமாக சூரபத்மனை வதம் செய்து தேவர்களை முருகன் காத்த சஷ்டி திதி தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிறப்பு வழிபாடு:
மாதந்தோறும் வரும் சஷ்டி நாட்களே முருகன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், கந்த சஷ்டி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் தற்போது முதலே கந்த சஷ்டி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.
சூரபத்மனை வதம் செய்த அடுத்த நாளில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடப்பது ஐதீகம். இதன்படி நவம்பர் 8ம் தேதி வரும் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அன்றைய நாளில் முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.