கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை  கேட்டுள்ளார்.


தமிழ்நாட்டை அதிர வைத்த சம்பவம் 


தமிழ்நாட்டின் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த மே 14 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளாச்சாராயம் குடித்ததாக 15 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் செங்கல்பட்டில் 7 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தனர்.


இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


இதற்கிடையில் உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கவில்லை என்றும், அவர்கள் குடித்தது ஆலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற விஷ சாராயம் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருந்தார். விழுப்புரம் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 


உத்தரவிட்ட முதலமைச்சர் 


இதற்கிடையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இன்று காவல்துறை மற்றும் மதுவிலக்குத்துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். அதே நாளில் முதல்வரின் அலுவலகத்திற்கு அறிக்கை தர வேண்டும் என உத்தரவிட்டார். 


அறிக்கை கேட்ட ஆளுநர் 


இந்நிலையில் விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை  கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? இதுவரை எத்தனைப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்பது தொடர்பாக விவரங்களை அறிக்கையாக தரும்படி அவர் கேட்டுள்ளார்.