ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கடந்த ஒரு மாத காலமாக களைகட்டிய தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் காலியாக உள்ள அந்த தொகுதியில் நாளை மறுநாள் (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இதில் திமுக கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவும், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்தும் களம் காண்கின்றனர்.
இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த ஒரு மாத காலமாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது. தெருக்கள், வழிபாட்டு தலங்கள், வணிக வீதிகள் என திரும்பும் இடமெல்லாம் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்தனர். வீட்டுக்கு வெள்ளை அடிப்பது தொடங்கி பாத்திரம் கழுவுவது வரை வித்தியாசமான ஸ்டைலில் கட்சியினர் ஓட்டு சேகரித்து வந்தனர்.
மேலும் முன்னதாக எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், சீமான், அண்ணாமலை, பிரேமலதா, சுதீஷ், ஜி.கே.வாசன், ஆளுங்கட்சி அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என பலரும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டனர்.
கடைசி நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமி தென்னரசுவுக்கு ஆதரவாகவும் தீவிரமாக வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வெளிநபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிமனைகளை அகற்ற வேண்டும் என்றும், இதற்கு மேல் தேர்தல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 725 புகார்கள் பெறப்பட்டு தேர்தல் விதிமீறல் தொடர்பாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் கூறியுள்ளார்.
மக்களின் முடிவு என்ன?
நாளை மறுநாள் (பிப்ரவரி 27) ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில், முன்னதாக 80 வயது கடந்தவர்கள் உள்ளிட்ட 348 பேரிடம் தபால் வாக்கு பெறப்பட்டுள்ளது. மேலும் என்னதான் அரசியல் கட்சிகள் விதவிதமாக வாக்குகள் கேட்டு சென்றாலும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் முடிவு என்னதாக இருக்கும் என்ற ஆர்வம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு எழுந்துள்ளது.