2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவை குறிப்பில் இடம் பெறாது எனவும் சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் புறப்பட்டார். இதையடுத்து ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதையடுத்து, மரபை மீறி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டதாகவும், அவையிலிருந்து பாதியிலேயே வெளியேறியது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு, போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தையும் அறிவித்தனர். 


இதையடுத்து,  நேற்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. 


அதில் சட்டமன்றத்தில் திமுகவின் எம்.எல்.ஏக்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது எனவும், ஆளுநருக்கு எதிராக போஸ்டர்களை அடிக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்தநிலையில், ஆளுநரின் சட்டப்பேரவை உரைக்கு வருத்தமும், நன்றியும் பதிவு செய்ய கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் எழுதியுள்ளார். சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்கிறது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 




இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையாற்றியமைக்கு பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது.


பேரவையின் மாண்பினை போற்றிடும் வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர் அவர்களின் உரைக்கு பேரவை உறுப்பினர்கள் நன்றி உடையவர்கள் ஆவார்கள்” என தெரிவித்துள்ளார்.