Online Rummy Ban Bill: தமிழக அரசுக்கு மிகப்பெரிய வெற்றி: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர்

Bill to Ban Online Rummy: தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

Continues below advertisement

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ. 5ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

2வது முறையாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கெனவே தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் 131 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பி வைத்தார். அதைத்தொடர்ந்தே இரண்டாவது முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.

திருப்பி அனுப்பிய ஆளுநர் 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் நாளுக்கு நாள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனை பின்னாளில்  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக தலைமையிலான அரசு அமைந்தது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்ட மசோதாவுக்கு கடந்தாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக ஆளுநர் தரப்பில் கேட்ட விளக்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பதிலளித்திருந்தது. 

ஆனால் 4 மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்மசோதாவை திருப்பி அனுப்பினார். மேலும் அதில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து உயிர்பலி ஏற்படுவதை தடுக்கும் வகையில் மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்ய  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இதன் பின்னர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், இதுவரை 41 பேர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் உயிரிழந்துள்ளதாகவும், மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola