புயல் கனமழையை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அவசர நிலையைச் சமாளிக்க மத்திய, மாநில அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன. இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம். மக்கள் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 


ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகே வட தமிழகப் பகுதியில் மூன்றரை மணி நேரமாக கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் பல மணிநேரம் கடலிலேயே பயணித்தது. இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் புயலின் வேகம் படிப்படியாக குறைந்ததால், புயல் கரையை கடப்பது தாமதமானது. இதன் தாக்கம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இன்று காலை முதலே அதிகமான மழைப்பொழிவு இருந்தது


இந்த நிலையில் தான் ஃபெஞ்சல் புயலின் வெளிவட்ட பகுதி காரைக்கால் - மகாபலிபுரம் இடையே மாலை 5.30 மணிபோல் கரையை கடக்கத் தொடங்கியது என்றும், இதன்மூலம் புயல் கரையை கடக்கத் தொடங்கும் நிகழ்வு தொடங்கியது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


புயலின் கண் பகுதி கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ தொலைவில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட மாமல்லபுரம் கல்பாக்கம் முதலியார் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் புயல் கரையை கடந்தது. 


குறிப்பாக கல்பாக்கம் பகுதியில் சூரை காற்று வீசியதால் மரங்கள் பல இடங்களில் முறிந்து விழுந்தது. புயல் எதிரொலியாக காலை முதலே செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.