ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாத நிலையில், 12 நாட்களில் 4ஆவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்றும் தடை சட்டத்திற்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி உள்ளதாவது:
''சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த உத்தண்டி வளவு கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து என்ற ஓட்டுநர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு, சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 36-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை அவசரச் சட்டம் காலாவதியானதற்கு பிந்தைய 12 நாட்களில் நிகழ்ந்த நான்காவது தற்கொலை இதுவாகும்!
ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதற்கு அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகளே சாட்சி. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால், அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வுகளாக மாறுவதை தவிர்க்க முடியாது!
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசரத் தேவை. ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் நிகழும் தற்கொலைகளை ஆளுனர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.''
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டை தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, கடந்த ஜூலை மாதம் 28 ம் தேதி தனது பரிந்துரைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.அதை தொடர்ந்து, அந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் குறித்தும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றியும் அன்றைய தினமே அமைச்சரவை கூட்டத்தில் துறை வாரியாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
71 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் அதனை விளையாடுபவர்களின் திறன்கள் எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை என்றும் மாறாக அவர்களுடைய திறன்களை குறைக்கும் வேலைகளையே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் செய்கின்றன. விளையாடும் நபர்களை ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குன்றன என்றும் அதோடு அவர்களை கடனாளியாக்கும் திட்டத்துடனே அவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து செப்டம்பர் 26 ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்ட மசோதாவிற்கு, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கிடையே அக்டோபர் ஒன்றாம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக, அக்டோபர் 7 ஆம் தேதி அன்று தகவல் வெளியானது. எனினும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.