உக்ரைன் நாட்டில் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து வந்த தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சூர்யா அரசன் (21) கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்குள்ள நிலைமை குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லுாரியில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். ரஷ்யா தொடுத்து வரும் போரால் உக்ரைன் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் குண்டு மழை வீசிய வண்ணம் இருந்தன. எப்படிப் பிழைக்க போகிறோம் என அஞ்சினேன். உயிருடன் வருவோமா மாட்டோமா என பயந்து இருந்தோம். பிப்ரவரி 23 ஆம் தேதி போர் தொடங்கிய நாளில் இருந்து பல்கலைக்கழகம் விடுப்பை அறிவித்துவிட்டது. எனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஆறுதல் கூறினர். இதற்காக  70,000க்கு டிக்கெட் எடுத்தும், நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. நான் மட்டுமல்லாமல், அனைத்து மாணவர்களும் அச்சத்தில்தான் இருந்தோம்.



போர் தொடங்கிய சில நாள்களில் நான் உள்பட 7 மாணவர்கள் 300 கி.மீ. தொலைவில் உள்ள உக்ரைன்-ஹங்கேரி எல்லையைக் கடப்பதற்காக தலா ரூ. 30,000 கொடுத்து சென்றோம். அதிலும் பல்வேறு இடர்பாடுகள் வந்தாலும், அதையும் கடந்து சென்றோம். பின்னர், அங்கிருந்து ரயிலில் ஹங்கேரி நாட்டுக்குப் புறப்பட்டோம். ஆனால் ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஒரு நாள் காத்திருந்துதான் அங்கு செல்ல முடிந்தது. ஹங்கேரியில் சில நாட்கள் தங்கினோம். அங்கே தன்னார்வலர்கள் பலர் உக்ரைனில் இருந்து வந்தவர்களுக்கு உணவு, இருக்க இடம் கொடுத்து உதவினர்.


இதையடுத்து, இந்திய அரசு மூலம் விமானத்தில் டில்லி வந்து பின்னர் சொந்த ஊருக்கு வந்தேன்.  ஊருக்கு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளைச் செய்தன. ஆனால் இன்னமும் உக்ரைன் நாட்டில் எப்படி நாடு திரும்புவது எனத் தெரியாமல் ஏராளமான மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க வேண்டும். நாங்கள் படிக்கும் பல்கலைக்கழகம் மார்ச் 13 ஆம் தேதி வரை விடுப்பு அறிவித்துள்ளது. மீண்டும் எப்படி கல்லூரிக்குச் செல்வது எனத் தெரியவில்லை. படிப்புத் தொடர மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது எனத் தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இந்தப் படிப்பைத் தொடருவதற்கான வாய்ப்புள்ளதாகவும், அதற்குக் கூடுதல் செலவாகும் எனவும் கூறப்படுகிறது. எங்களது படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் உதவி புரிய வேண்டும் என்றார். மகன் வந்ததையறிந்த பெற்றோர்கள், உறவினர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.