கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கிப் பணிபுரிந்த ஹோட்டல்களுக்கு இன்னும் 200 கோடி ரூபாய் வரை நிலுவைத்தொகையைத் தமிழக அரசு இன்னும் செலுத்தவில்லை என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது தான் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சமயத்தில் அனைவருக்கும் தெய்வமாகத் தெரிந்தவர்கள் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தான். தினமும் பல ஆயிரத்திற்கு மேல் கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், எந்தவித சளிப்பும் இன்றி இன்முகத்துடன் சேவையாற்றினார்கள். குறிப்பாக கொரோனா தொற்று அதிவேகமாக பரவிய காலத்தில் முன்களப்பணியாளர்களாக செவிலியர்களும், மருத்துவர்களும் வீட்டிற்கே செல்லவில்லை. மருத்துவ மனைகள் மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டல்களில் தான் தங்கியிருந்தனர். அதிலும் சென்னையில் தொற்றின் தாக்கம் கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில், மற்ற மாவட்டங்களிலிருந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தங்கும் இட வசதியையும் தமிழக அரசு ஏற்படுத்திக்கொடுத்தது.





இதோடு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்கு முன்னதாக, ஒரு வாரக்காலத்திற்கு ஹோட்டல்களில் கோரன்டைன்களில் இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் ஹோட்டல்களில் தங்கி இருக்கும் போது அவர்களுக்கான சாப்பாடு, தங்குவதற்கான அனைத்தும் சரி வர செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான எந்தப்பணத்தையும் தமிழக அரசுக்கொடுக்கவில்லை எனவும்., கடந்த 8 முதல் 10 மாதங்களில் மட்டும் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் ஹோட்டல் உரிமையாளர்களிடம் தமிழக அரசு கடன்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுக்குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கையில், விரைவில் நிதித்துறையிடம் தெரிவித்து 109 ரூபாய் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.





மேலும் தமிழக அரசு இப்படி நிறுத்த வைத்துள்ள தொகையினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், தங்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டியுள்ளதாக  டார்லிங் ரெசிடென்சியைச்சேர்ந்த எம். வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார். மேலும் வசந்தபவன் நிறுவனத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரூ.2 கோடி நிலுவைத்தொகைக் கொடுக்க வேண்டும் எனவும், இதனை தீபாவளிக்கு முன்னதாக கொடுத்துவிட்டால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவோம் என வசந்தபவன் சேர்மன் ரவி கூறியுள்ளார். இவ்வாறு பணம் கொடுக்காமல் இருப்பதால் எங்களால் காய்கறி போன்ற எங்களது சப்ளையர்ஸ்களுக்குக் கொடுக்கமுடியவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கின்றனர்.