அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணமாக இதுவரை, அதிகபட்சமாக 10,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த முன்பணம் தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக இதே தொகையை வழங்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்த முதலமைச்சர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த பட்ஜெட கூட்டத் தொடரின்போது, விதி எண் 110-ன் கீழ், அரசு ஊழியர்களின் திருமண முன்பணம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அதில், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, அவர்களின் பணிக்காலத்தில், தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக, பெண் ஊழியர்களுக்கு 10,000 ரூபாயும், ஆண் ஊழியர்களுக்கு 6,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதை பல மடங்கு உயர்த்தி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொதுவாக 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

இந்த நிலையில், தற்போத அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இனி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக 5 லட்சம் ரூபாய் என்ற அளவில் திருமண முன்பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, பெண் ஊழியர்கள் 10 ஆயிரம் ரூபாயும், ஆண் ஊழியர்கள் 6 ஆயிரம் ரூபாயும் பெற்றுவந்த நிலையில், இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பெரிய அளவில் உயர்த்தப்பட்டு வழங்கப்படும் இந்த தொகை, திருமண செலவுகளை சமாளிக்க ஏதுவாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மேலும், இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்கள் மீதான அரசின் அக்கறையை காட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், திருமண நேரத்தில் ஏற்படும் டென்ஷனையும் இது குறைக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே பல அறிவிப்புகள் முதலமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பு தான். கடந்த 2023-ம் ஆண்டு 14-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. மேலும், 7-வது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

இதோடு, அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு வழங்குவது குறித்தும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதுபோன்று வெளியிடப்பட்ட இன்னும் பல அறிவிப்புகள், அரசு ஊழியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.