"செங்கல்பட்டில் விபத்தில் உயிரிழந்த மருத்துவரின் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது"

விபத்தில் உயிரிழந்த மருத்துவர் 

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் மணிக்குமார் குழந்தை நல மருத்துவராக பணியாற்றி வந்தார். தாம்பரத்தில் இருந்து தினமும், புறநகர் ரயில் சேவை மூலம் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து நடந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு பகுதியில் கல்பாக்கத்திலிருந்து, செங்கல்பட்டு நோக்கி வந்த அரசு பேருந்து, தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலை ஓரம் நடந்து சென்ற மருத்துவர் மணிக்குமார் பரிதாபமாக சிக்கி உயிரிழந்தார். மணிக்குமாரின் உடலுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்கள் என பலதரப்பட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இறந்தும் உயிர் வாழும் மருத்துவர் மணிக்குமார்

மணிக்குமார் மருத்துவர் என்பதால், தான் உயிரிழந்த பிறகும் தன்னுடைய உடல் உறுப்புகள் பிறருக்கு பயன்பட வேண்டும் என, உயிருடன் இருந்தபோதே உடல் உறுப்பு தானம் செய்திருந்தார். இதன் அடிப்படையில் விபத்து ஏற்பட்ட பிறகு அவரது உறவினர்களின் அனுமதியுடன், அவரது கண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்ததால் பிற உறுப்புகளை பயன்படுத்த முடியாத சூழல் இருந்தாலும், அவரது இரண்டு கண்களும் இரண்டு நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அவருடைய கண்கள் உயிரிழந்த பிறகும், வேறு ஒருவர் மூலமாக இந்த உலகத்தை பார்க்க உள்ளது. மருத்துவர் மணி குமாரின் இந்த செயல் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறது என்றே சொல்லலாம். 

உடல் உறுப்பு தானம் ஏன் முக்கியம் ?

உடல் உறுப்பு தானம் என்பது ஒரு மனிதர் இறந்த பிறகு, அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளைத் தேவைப்படும் மற்றொரு நோயாளிக்கு பொருத்தப்படும்.நாம் இறந்த பிறகும் உறுப்பு தானம் பலரின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது. இதன் மூலம் இறந்த பிறகும் நாம் பிறருக்கு உதவலாம். 

சிறுநீரகம் செயலிழந்தவர்கள் டயாலிசிஸ் செய்வதை உறுப்பு தானம் மூலம் தவிர்க்கலாம். கண் தானம் பார்வையற்றவர்களுக்குப் பார்வையை அளிக்கிறது. இறப்பிற்குப் பிறகும் ஒருவரின் உறுப்புகள் இன்னொருவருக்குப் பயன்படுவது, அவரது குடும்பத்தினருக்கு ஒரு பெரிய ஆறுதலை அளிக்கிறது. இது மனிதநேயத்தின் மிக உயர்ந்த பார்க்கப்படுகிறது.