புதுச்சேரி : தமிழகத்தின் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி அரசியலில் கால்தடம் பதித்த நிலையில் தேர்தலுக்கான பணியை தொடங்கிவிட்டார்.
புதுச்சேரி அரசியலில் கால்தடம் பதித்த ஜோஸ் சார்லஸ்
234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆகும் கனவில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில், மிக குறைந்த தொகுதிகளை மட்டுமே கொண்ட புதுச்சேரியில் எளிதாக முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கவிருக்கிறார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ்.
விநாயகரை கும்பிட்டால் உங்கள் கையில் அரை கிலோ சர்க்கரை நிச்சயம்
தமிழகத்தின் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி அரசியலில் கால்தடம் பதித்துவிட்டார். அவர் காமராஜ் தொகுதியில் நிற்பது உறுதியாகி விட்டது. தொகுதி எம்.எல்.ஏ.,வாக ஜான்குமார் முன்னின்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தேர்தலில் நிற்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகின்றார். காமராஜ் நகர் தொகுதிக்கு என்ன தேவை, மக்களுக்கு என்ன தேவை என வீடு வீடாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உங்க வீட்டிற்கு 'இன்வெர்ட்டர்' கொடுத்தால் சரியாக இருக்குமா, 'அக்வா வாட்டர் பியூரிபையர்' வேண்டுமா என, தொகுதி முழுவதும் சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து, தொகுதிகளில் உள்ள ஹிந்துகளின் ஓட்டுகளை கவரும் வகையில், தற்போது தடபுடல் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி,தொகுதியில் 25 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படுவதுடன், இங்கு விநாயகரை கும்பிடும் அனைவருக்கும் அரை கிலோ சர்க்கரை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. காமராஜ் தொகுதியில் விநாயகரை கும்பிட்டால் உங்கள் கையில் அரை கிலோ சர்க்கரை நிச்சயம்.
இனி சமூகத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்!
சமீப நாட்களுக்கு முன் அவர் கூறுகையில்., பல தலைமுறைக்கு தேவையான சொத்துகளை எனது தந்தை சேர்த்து வைத்துள்ளார். ஆகவே இனி சமூகத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம். புதுச்சேரி அரசியலில் வர விருப்பம் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து உரிய நேரம் வரும்போது தெரிவிக்கப்படும். இப்போது எந்த கட்சியைச் சார்ந்தும் நான் வரவில்லை. தொழிலதிபர் என்ற முறையில் இப்போது வந்து உதவிகளை செய்ய வந்துள்ளேன். பல ஆண்டுகளாக முதல்வரால் எதையும் செய்ய முடியவில்லை. அவர் செய்திருந்தால் நான் வரவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆகவே தான் நாங்கள் வருகிறோம் என்று அவர் கூறினார்.