தமிழ்நாடு காவல்துறை நன்கு பயிற்சி பெற்ற, திறமையான காவலர்களைக் கொண்டது, அது தற்போது அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்துள்ள ஆளுநரிடம், “நீங்கள் முன்னாள் காவல் அதிகாரி, தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்ற கேள்விக்கு, தமிழ்நாடு காவல்துறை நன்கு பயிற்சி பெற்ற, திறமையான காவலர்களைக் கொண்டது, அது தற்போது அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் உங்களுக்கு ஒரு உதாரணம் கூறுகிறேன், நான் தருமபுரம் ஆதின மட நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, சிலர் என்மீது கற்கள், குச்சிகளை கொண்டு தாக்கினர். ஆனால் அவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால்,போலீசார் அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றார். 


சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது நீங்கள் வெளியேறியதும், முக்கிய தலைவர்களின் பெயரை குறிப்பிடாததும் சரியா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,  பதிலளித்த அவர், “2022 ஆம் ஆண்டு சட்டபேரவையில் முதன்முறையாக நான் பேசுவதற்கு முன்பு,  தேசிய கீதம் இசைக்க மாட்டோம் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் உரையாற்றுவதற்கு முன், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.


மேலும் ஆளுநர் வரும்போதும், புறப்படும் போதும் தமிழ் தாய் வாழ்த்து, தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். நான் வற்புறுத்திய போதிலும், அவர்கள் பேசுவதற்கு முன் தேசிய கீதத்தை இசைக்காமல் புறப்படும் நேரத்தில் இசைத்தனர். இந்தமுறை சபாநாயகர் என்னை அழைக்க வந்தபோது, மீண்டும் கோரிக்கை வைத்தேன். நாடாளுமன்றம்,  அனைத்து மாநில சட்டசபைகளிலும் தேசிய கீதம் மதிக்கப்படுகிறது. இதுகுறித்து வாய்மொழியாகக் கேட்டதோடு மட்டுமல்லாமல், இதுகுறித்து அவருக்கும், முதல்வருக்கும் கடிதம் அனுப்பினேன். ஆனாலும் தேசிய கீதம் இசைக்கவில்லை என்றார். 


அரசு முன்வைக்கும் உரையை பொறுத்தவரை, அது அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். ஆனால் என்னிடம் கொடுத்த உரையில், அது கொள்கைகளாகவோ, திட்டங்களோவோ இல்லாமல் பிரச்சாரம் செய்வது போல் இருந்தது. இது தவறானது. பொய்யாக இருந்தது. சட்டம்-ஒழுங்கை பொறுத்தவரையில் தமிழகம் 'அமைதி பூங்கா' என்றார்கள். நான் சில விஷயங்களை மேற்கோள் காட்டினேன். 


நான் திராவிட ஆட்சி முறையைப் பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். முதலாவதாக, அத்தகைய மாதிரி ஆட்சிமுறை இங்கு எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் முழக்கம் மட்டும்தான். காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சி மட்டுமே உள்ளது.  'ஒரே பாரதம், ஒரே இந்தியா' என்ற கருத்தை ரசிக்காத ஒரு சித்தாந்தம் திராவிட மாடல் சித்தாந்தம்" என்று கூறியுள்ளார்.