Savukku Shankar: யூடிபூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்ததை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து:
பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும், கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் திருச்சி, கோவை மற்றும் சென்னை என, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான சுமார் 18 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சவுக்கு சங்கரின் தாயார் கமலா வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை விவரம்:
இதுதொடர்பான ஆட்கொணர்வு மனுவில், தனது மகன் சவுக்கு சங்கரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து இருப்பதாகவும், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். விசாரணையின் போது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததான் காரணமாக, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததாக, காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதன் முடிவில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த நடவடிக்கையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வேறு வழக்கில் ஜாமின் பெற தேவையில்லை என்றால், சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விடுதலையாவாரா சவுக்கு சங்கர்?
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள சவுக்கு சங்கர், அடுத்தடுத்து 5 வழக்குகளில் ஜாமின் பெற்று இருந்தார். ஆனாலும், குண்டர் சட்டம் இருந்ததால், அவரால் வெளியே வரமுடியாத சூழல் இருந்தது. இந்நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை கைது செய்யப்பட்டுள்ளது. இதனால், மற்ற வழக்குகளில் நிலவரத்தின் அடிப்பட்டையிலேயே, சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்படுவது தொடர்பான இறுதி முடிவு அமையும்.