Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
தங்கத்தின் விலை சவரனுக்கு 60 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு இதை கட்டுக்குள் கொண்டு வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகின் மதிப்பு மிக்க பொருளாகவும், சிறந்த முதலீடாகவும் திகழ்வது தங்கம். உலகில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில்தான் தங்கத்தின் புழக்கம் அதிகமாக உள்ளது. தங்கமானது ஆடம்பரமான பொருளாக சில குடும்பத்தினருக்கு இருந்தாலும், நடுத்தர மற்றும் சாமானியர்ள் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு தங்கம் என்பது அத்தியாவசமான மற்றும் ஆபத்தான காலத்தில் காப்பாற்றும் ஆபத்பாந்தவனாகவும் உள்ளது.
முதலீடாக மாறிய தங்கம்:
2000ம் ஆண்டுக்கு முன்பு வரை தங்கத்தின் பயன்பாடு குறைவான அளவு இருந்த நிலையில், அதன் விலையில் பெரியளவு ஏற்றம் இல்லை. ஆனால், 2000ம் ஆண்டுக்கு பிறகு உலகமயமாக்கலுக்கு பிறகு தங்கம் என்பது நகையாக மட்டுமின்றி சிறந்த முதலீடாகவும் மாறியுள்ளது.
இதனால், சிறந்த சேமிப்பான தங்கத்தை நகைகளாகவும், நாணயங்களாகவும் மக்கள் சேமிக்கத் தொடங்கினர். இந்த சூழலில், கொரோனாவிற்கு பிறகு ஏற்பட்ட சூழல், உக்ரைன் - ரஷ்ய போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் வட்டி விகிதத்தை நிதி அமைப்புகள் குறைத்த காரணத்தால் மிகப்பெரிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
60 ஆயிரத்தைக் கடந்த விலை:
இதன் காரணமாக, சர்வதேச அரங்கில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று 60 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்கப்படுகிறது. செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி. என சேர்த்து இதன் விலை 70 ஆயிரத்தை நெருங்கும் என்பதே உண்மை.
சாதாரண மக்கள், நடுத்தர குடும்பத்தினர் தங்களிடம் உள்ள சிறிய அளவிலான தங்கத்தையே தங்களது கடினமான காலகட்டத்திற்கு பணத்தேவைக்காக வங்கிகளில் அல்லது அடகுக்கடைகளில் அடகு வைத்து பணமாக பெற்று வருகின்றனர். ஆனால், நாளுக்கு நாள் எகிறும் இந்த தங்க விலையால் மக்கள் கிராம் அளவு தங்கம் வாங்குவதுகூட சவாலாக மாறி வருகிறது.
கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய அரசு?
திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்குவதற்கு சாமானிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் தடுமாறி வருகின்றனர். இந்த சூழலில், தற்போது 60 ஆயிரத்திற்கும் அதிகமாக தங்கம் விலை உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையில், தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த முறை மத்திய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்ததால் தங்கம் விலை சற்று குறைந்தது. இந்த நிலையில், மீண்டும் தங்கத்தின் விலையை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வருமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.