உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையின் போது சுவாதி  திடீரென மயங்கி விழுந்ததால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது.


இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 



வழக்கு விசாரணையின்போது மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளைப்போல தவற்றுக்கு எதிராக சமநிலையைப் பேண இயலாது. நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. இது கட்டாயம் தேவையானது, தவறினால் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் எனவும் தோன்றுகிறது. நாமக்கல் காவல் கண்காணிப்பாளர், போதுமான காவல்துறை பாதுகாப்பை சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, தொலைபேசியில் பேசுவதோ கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


 இந்நிலையில் சுவாதி இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானார். விசாரணை open court-ல் நடைபெற்றது. விசாரனையின்போது சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு சுவாதியிடம் சரமாரி கேள்வி கேட்கப்பட்டது.  

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வாக்குமூலம் அளித்த சுவாதி கோகுல்ராஜ் கல்லூரியில் என்னுடன் பயின்றார். ஒரே வகுப்பு.  சகமாணவரைப்போல கோகுல்ராஜைத் தெரியும். அவர்களோடு பேசுவது போல, கோகுல்ராஜிடமும் பேசியுள்ளேன். மேலும் அந்த சிசிடிவி காட்சியை பார்த்து வீடியோவில் இருப்பது நானல்ல என கூறினார். இந்த தகவலை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். மூன்று முறைக்கும் மேலாக அந்த பெண் யாரென தெரியவில்லை என சுவாதி கூறியதால், நீதிபதிகள்  உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு சுவாதி கண்கலங்கினார்.


வீடியோவில் அந்த பெண் அருகில் இருக்கும் பையன் யார்  என  நீதிபதிகள் கேள்விக்கேட்டனர், அதற்கு கோகுல்ராஜ் போல தெரிகிறது என சுவாதி கூறினார். மேலும் அப்போ அந்த பெண் நீங்கள் இல்லையா என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது,  மூன்று முறை நீதிபதிகள் கேட்டபோதும், அந்த பெண் யார் என தெரியவில்லை என கூறிவிட்டார்.


15 நிமிட இடைவேளைக்கு பின் மீண்டும் சுவாதியிடம் கேளிவிகள் கேட்கப்பட்டது. பிழற்சாட்சியாக மாறிவிட்ட சுவாதியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். அப்போது சுவாதி திடீரென மயங்கி விழுந்தார், இதனால் நீதிமன்றத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின் மருத்துவ பரிசோதனைக்காக சுவாதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீண்டநேரம் நின்று வாக்குமூலம் அளித்ததால் களைப்பால் மயங்கி இருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


பின்னர் நீதிபதிகள் : நீதிமன்றம் உங்களிடமிருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது. வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள்.  எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? நீங்கள் ஒரு பொறியியல் பட்டதாரி. எது சரி? தவறு ? என உங்களுக்குத் தெரியும்.


கீழமை நீதிமன்றத்தைப் போல இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது. சாட்சியாக வந்த நீங்கள் நீதிமன்றத்தை உதாசீனம் செய்யும் வகையில் பல பொய்களைக் கூறுவதை ஏற்க இயலாது. சத்தியப்பிரமாணம் எடுத்த இடங்களிலெல்லாம் பொய் சொல்கிறீர்கள். காவல்துறையினர், அரசு வழக்கறிஞர்கள் மிரட்டினார்கள் என்பதைத் தாண்டி, நீதித்துறை நடுவர் முன்பாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இப்போது மிரட்டினார்ர்கள் என்றால், நீதிமன்றத்தை விளையாட்டுப் பொருளாக நினைக்கிறீர்களா?


இவற்றையும் தாண்டி நீங்கள் உண்மையை மறைத்தால், உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இல்லையெனில், இந்த வழக்கில் உண்மையைக் கூறுவதால் ஏதேனும் அழுத்தங்கள், பிரச்சனைகள் எழுமெனில் அவற்றையாது சொல்லுங்கள் என தெரிவித்தார்.


அதற்கு சுவாதி, எனக்கு தெரிந்தவற்றை சொல்லிவிட்டேன் என தெரிவித்தார்.  அதற்கு நீதிபதிகள், " சத்தியம் என்றைக்கானாலும் சுடும்" என தெரிவித்தனர். தொடர்ந்து, சுவாதி அவரது பெற்றோர், குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவும், காவல்துறையோ, குற்றவாளிகள் தரப்பிலோ அவரை அணுகக்கூடாது என தெரிவித்து வழக்கை நவம்பர் 30ஆம் ஒத்திவைத்துள்ளனர். அன்றைய தினம் சுவாதி ஆஜராகவும் உத்தரவிட்டனர். அன்றும் இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்