தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இந்தி திணிப்புக்கு எதிராக பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாத காரணத்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு வீரர் இந்தி தெரியாதா? தமிழ்நாடு இந்தியாவில்தானே உள்ளது. இந்தி தேசிய மொழி கூகுள் செய்து பாருங்கள் என்று ஏளனமாக பேசியது தமிழ்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


முதலமைச்சர் கண்டனம்:


இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கண்டனத்தில் கூறியிருப்பதாவது, “கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் சி.ஐ.எஸ்.எஃப்.






வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மொழி உரிமையும் மனித உரிமையே:


இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மட்டுமின்றி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,


கோவா விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.





விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல. பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைகேகட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.