கொரோனாவின் பரபரப்புக்கு நடுவே தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை திமுக மட்டுமே பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக மே 7-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கவனிக்கவைத்துள்ளன. பல எதிர்பார்ப்புகளுக்கு நடுவே நடந்து முடிந்துள்ள இந்த தேர்தலின் ஆட்டநாயகன் யார் என்றால் திமுகவின் ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமிதான். 




தன்னை எதிர்த்து போட்டியிட்ட 19  போட்டியாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார் பெரியசாமி. மாபெரும் வெற்றியடைந்த பெரியசாமி இரண்டாம் இடம் பிடித்த பாமக வேட்பாளர் திலகபாமாவை விட 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 568 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மாபெரும் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த ஐ. பெரியசாமி யார்? மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஆத்தூர் தொகுதி, பெரியசாமியின் கோட்டையானது எப்படி?


எப்போ போனாலும் எம்.எல்.ஏ. பெரியசாமியை பாத்துடலாம் என்பதே ஆத்தூர் தொகுதி மக்களின் மனநிலை. எளிதில் அணுகக்கூடிய ஒரு நபராக இருப்பது, சொந்தக்கட்சி, பிற கட்சி என்று பாகுபாடு இல்லாமல் இருப்பது, கட்சியின் முக்கிய பதவியில் இருந்தாலும் மக்களோடு மக்களாக பழகுவது, தொகுதிக்கான தேவைகளை உடனுக்குடன் செய்து வைப்பது என ஐ. பெரியசாமி ஸ்கோர் செய்ய பல காரணங்களை அடுக்குகின்றனர் ஆத்தூர் மக்கள். 




தொடக்க காலங்களில் கலைஞர் கருணாநிதியின் பேச்சாலும், அரசியல் நடவடிக்கைகளாலும் கவரப்பட்ட ஐ. பெரியசாமி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். 70-களின் காலக்கட்டத்தில் திமுக வழிநடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்ட பெரியசாமி கட்சியின் மதிப்பை பெற்றார். அதன்பின்னர் தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றிய ஐ.பெரியசாமி மாவட்ட செயலாளராக அதிகம் கவனிக்க வைத்தார். பின்னர்  1989-ஆம் ஆண்டு முதல்முறை ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார். அதன்பின்னர் 1991-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். அதையடுத்து 1996-ஆம் ஆண்டில் மீண்டும் வெற்றி. பின்னர் 2001-இல் தோல்வி. அதன் பின்னர் 2006, 2011, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் ஐ.பெரியசாமி ஹாட்ரிக் வெற்றி பெற்றார். தொடர் வெற்றி இந்த தேர்தலிலும் சிக்ஸர் அடித்திருக்கிறது.