ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கமாக ஆளுநர் உரையானது ஆளுங்கட்சியினரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவது ஆகும்.


இதேபோல, தி.மு.க. அரசு சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட ஆளுநர் உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பல வரிகளை வாசிக்காமல் விட்டதாக கூறப்படுகிறது. இது சட்டசபையில் இருந்த தி.மு.க.வினருக்கும், தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஆளுநர் உரையை தமிழில் மொழிபெயர்த்து வாசித்த சபாநாயகர் அப்பாவு முழு உரையையும் விளக்கமாக வாசித்தார்.




பின்னர், ஆளுநர் உரை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி தனது உரையை முடிக்கும் முன்னரே ஆளுநர் அவையை விட்டு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டசபையில் இன்று நடைபெற்ற இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், ட்விட்டர் தளத்தில் ஆளுநருக்கு எதிரான ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. கெட்அவுட்ரவி என்ற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும், மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. சட்டசபையில் இன்று ஆளுநர் பாதியில் இருந்தே வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




ஆளுநர் தன்னுடைய உரையில் தந்தை பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரது பெயர்களை தவிர்த்தார். இது ஆளுங்கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சட்டசபை கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக முன்பு வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்து நடைபெறும் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கும் மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: ஆளுநர் உரையில் வார்த்தைகள் தவிர்ப்பு.. ஆளுநர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்..


மேலும் படிக்க: தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தார்.. அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..