பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம், ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என்றும், தான் தமிழ்நாட்டின் மகள் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு  சவால் விடுத்துள்ளார்.


முற்றிய மோதல்


கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டதால், பாஜக அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து காயத்ரி ரகுராம் இடைநீக்கம் செய்யப்படுவதாக  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். 


அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை விரட்டுவது தான் அண்ணாமலையின் குறிக்கோள் போன்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தான் பாஜகவிலிருந்து விலகுவதாக கடந்த ஜன.3ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் காயத்ரி ரகுராம்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கட்சியிலிருந்து யார் விலகினாலும் புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கட்சியை விட்டு விலகினாலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் எனக் கூறியிருந்தார். 


அண்ணாமலைக்கு எதிராக தொடர் ட்வீட்


இந்நிலையில் காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.


முன்னதாக “ரஜினி ரசிகர் மன்றம் IT- SM ஐ  அண்ணாமலை ட்ரோலுக்காக தவறாக பயன்படுத்துகிறார்” என்றும், “உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது” என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ட்வீட் செய்தார் காயத்ரி ரகுராம்.


இந்நிலையில், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த காயத்ரி ரகுராமை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிப்பதாக,  பாஜகவின் மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் ஜன.13ஆம் தேதி அறிவித்தார்.


மாநில அமைப்பு பொதுச்செயலாளருக்கு வாட்ஸ்-அப்பில்  ராஜினாமா செய்கிறேன் என்று செய்தி அனுப்பி இருந்த அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு,காயத்ரி ரகுராமை  அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து கட்சி  பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


’நான் தமிழ்நாட்டின் மகள்’


இந்நிலையில் முன்னதாக அண்ணாமலைக்கு எதிராக மீண்டும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன்.




உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம்' எனப் பதிவிட்டுள்ளார்.