இந்தியச் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவர்களது பிறப்பு தொடங்கியே நிகழத்தொடங்கி விடுகிறது. ஒரு பெண் தனக்கு எதிராகப் பாலியல் ரீதியாக நிகழ்த்தப்படும் ஏதோ ஒரு பாலியல் அடிப்படையிலான குற்றத்தை வாழ்நாள் முழுமைக்குமாக எதிர்கொண்டபடிதான் இருக்கிறாள். சென்னை சுஷில் ஹரி பள்ளியில் பிஞ்சு மாணவர்களிடம் நிகழ்ந்த பாலியல் கொடுமை, மற்றொரு சென்னை பள்ளியில் ப்ளஸ்-டூ மாணவர்களிடம் ஆசிரியரின் தொடர் பாலியல் குற்றங்கள், புகார் கொடுக்கப்பட்டு மூன்றாண்டு காலங்கள் கழித்தும் இன்னும் பாதிக்கப்பட்டவர்களிடமே ”ஆதாரம் இருக்கா?” “அப்ப ஏன் சொல்லல?” “இப்போ எதுக்கு சொல்ற?” எனக் கேட்டுக்கொண்டிருக்கும் திரைப்படப்பாடலாசிரியர் வைரமுத்து விவகாரம் வரை, கடந்த வாரங்களில் நிகழ்ந்தவைகளில் மட்டும் அதற்கான சான்று இத்தனை. 


சுற்றியிருக்கும் பெண் நண்பர்கள் வட்டத்தில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் தங்களுக்கு நிகழ்ந்ததைப் பெரும்பாலும் அவர்கள் வெளியே சொல்லுவதே இல்லை. ’நாமும் இதில் உடந்தையாக இருந்துள்ளோமா? அல்லது நமக்கு நடந்ததை வெளியே சொன்னால் இவர்கள் என்ன நினைப்பார்கள், அடுத்து என்ன செய்வார்கள்?’ என்கிற ஒரு மிகப்பெரிய பதற்றமான கால இடைவெளியை அவர்கள் தானாகவே கடக்கவேண்டியதாக இருக்கிறது. ஒரு சிலர் வாழ்நாள் முழுமைக்கும் அதே பதற்றத்துடனேயே கழிக்கிறார்கள். சிலர் அந்தப் பதற்றம் அத்தனையையும் உடைத்துக்கொண்டு தனக்கு நிகழ்ந்ததை உலகத்திடம் சொல்லவரும்போது, அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, ‘இதை ஏன் நடந்தப்போவே சொல்லாம இப்போ சொல்றீங்க?’ அல்லது ‘ஆதாரம் இருக்கா?’ என்பதுதான்.


குற்றம்சாட்டப்படும் நபருக்கு அவர்களது அதிகாரம், செல்வாக்கு அதைவிட முக்கியமாக அவர் ஆண் என்பதால் பிறப்பிலிருந்தே அவருக்கு சமூகம் தந்திருக்கும் பாலின அடிப்படையிலான சலுகைகள் என அடுக்கடுக்கான காரணங்களால் அவர்களிடம் யாரும் ‘நீ குற்றமிழைக்கவில்லை என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா?’ எனக் கேட்பதில்லை. அதிகாரம் உறுதுணையாக இருப்பதால் கேள்வி எழுப்பவே முடிவதில்லை என்பது வேறு கதை. 


இத்தனை அலட்சியங்கள், ஒடுக்குமுறைகளையும் மீறிப் பெண்கள் தொடர்ந்து தங்கள் மீது இழைக்கப்படும் குற்றங்களைப் பற்றிப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சட்டரீதியாகப் புகார் கொடுத்து சட்டத்தின்பிடியிலும் சமூகத்தின் பிடியிலும் இழுத்தடிக்கப்படாமல் தனக்கு நிகழ்ந்ததற்கு பாதிக்கப்பட்டவர்கள் தேடும் குறைந்தபட்ச நீதிதான் இந்தப் பகிர்வுகள்.






அந்த வரிசையில் அண்மையில் சமூகவலைத்தளங்களில் மிகவும் அறியப்பட்ட முகமான ஐ.ஆர்.எஸ். அதிகாரி பூ.கொ.சரவணன் மீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய புகார்கள் ட்விட்டர் ஃபேஸ்புக் என பல பக்கங்களில் பதிவு செய்யப்பட்டன.  'நேரிலும் இணையத்திலும் பார்க்கும் ஒரு பெண்கள்விடாமல், வலியச் சென்று நட்பு பாராட்டுவது, வாட்சப் எண்ணைப் பெறுவது அல்லது திருடுவது..செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறாய் சொல் எனக் கேட்பது, பிறப்புறுக்களின் புகைப்படத்தை அனுப்புவது..எதோ தெரியாம அனுப்பிட்டேன் என மன்னிப்பு கேட்பது...’ எனப் பலபக்கத்துக்குப் பதிவிடப்பட்ட அந்தப் புகார் பிறகு என்ன காரணத்தாலோ நீக்கப்பட்டது. இந்தப் புகாரை அடுத்துதான் பல்வேறு தளங்களில் அவரிடம் இதுகுறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. 




அதற்கு அந்தப் பதிவுகளிலேயே பதிலளித்த பூ.கொ.சரவணன்,’போலியான எதிர்வினைகளை எடுத்துக்கொண்டு என்னை நோக்கி pervert எனும் வசைகள் வீசப்படுகின்றன. நான் கவிதை எழுதுவது, புத்தகங்கள் பரிசளிப்பது ஒருவரின் மீதான மரியாதை,நட்பு,அன்பு சார்ந்தது. அது அனைத்தும் பாலியல் விழைவுக்குத்தான் எனும் தொனியை அவரின் பதிவு இருந்தது. என்னிடம் என்ன,ஏது எனக்கேட்காமல் பலரும் அதைச்சான்றாக எடுத்துக்கொண்டு பகிர்ந்தார்கள். நான் பெண்ணின் ஆளுமையின் மீதான ஆணின் பாலியல் முன்னெடுப்புகள் எத்தகைய தாக்குதல், காயத்தை,அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என உணர்ந்திருக்கிறேன். வரம்புமீறல்களை நான் ஒருக்காலும் மேற்கொண்டதில்லை’  என சமூகவலைத்தளங்களில் பதிலளித்திருந்தார். 




ஆனால் அறிவுசார் போர்வைக்குள் இருந்துகொண்டு தான் செய்த திணிப்புகளை பூ.கொ.சரவணன் மழுப்பலாகத் தவிர்க்கப் பார்க்கிறார் எனக் குற்றம் சாட்டுகிறார்கள், புகார் கூறியிருக்கும் பெண்கள். புகார் அளித்தவர்களில் சிலர் பூ.கொ.சரவணனைப் போல தானும் அரசு அதிகாரியாக வேண்டும் என்கிற பேரார்வத்துடன் அவரைத் தனது ஆசானாக ஏற்றவர்கள். 


’அந்தரங்க உறுப்புகளைப் புகைப்படம் எடுத்து அனுப்புவது, அப்படி அனுப்பாதீர்கள் எனச் சொன்னதும் தெரியாமல் அனுப்பிட்டேன் இனிமேல் அப்படி நடக்காது என பதிலளிப்பது. அறிவுசார் ரீதியாகத் தன்னிடம் நட்புறவில் இருக்கும் சிறுவயதுப் பெண்களிடம் சென்று ’அழகாயிருக்கே, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’ என்பது அதற்கு அந்தப் பெண் ’உங்கள் மீது நிறைய மதிப்பு உள்ளது’ என பதிலளித்தால் அதையும் கேலி செய்யும் வகையில் முகம் கோணும் அளவுக்குப் பேசுவது. அப்படிப் பேசவேண்டாம் என்று சொன்னாலும் மீண்டும் அதையே தொடர்வது, மேலும் அந்தப் பெண்கள் மனரீதியாகத் தாங்களே தன்னை சந்தேகிக்கும் அளவுக்கு அவர்களிடம் தன் பேச்சுகளைத் திணித்துள்ளார்(புகார் அளித்துள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அதுதொடர்பான ஸ்க்ரீன்ஷாட்கள் இங்கே பதிவிடப்படவில்லை) இதில் ஒவ்வொரு பெண்களின் குணம் உணர்ந்து அதற்கு ஏற்றபடி மூவ் செய்திருக்கிறார்.


இதுதவிர வேறு சில புகார்களும் அடக்கம். இது அத்தனையிலும் அவர் ஒரே வகையான பாங்கில் அனைவரிடமும் மூவ் செய்து வந்திருக்கிறார்’ என்கிறார்கள் புகார் அளித்துள்ள பெண்கள். அவர்களுக்கு காவல்துறைவரை இந்த விவகாரத்தை எடுத்துச் செல்லும் மனநிலை, இல்லையென்றாலும் பூ.கொ.சரவணன் பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும், பொதுமேடைகளில் ஏறிப் பேசக்கூடாது எனக் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கொ சரவணனை தொடர்புகொள்ள முயற்சித்தோம். பதில் கிடைக்கவில்லை. அவரது தரப்பு விளக்கத்தை அளித்தால், அதை வெளியிடத் தயாராகவுள்ளோம்.


தன்னை ஆசானாக ஏற்றுக்கொள்ளும் தன்னை முன்மாதிரியாகப் பார்க்கும் இளையோர்களிடம் தனது அறிவுசார் மற்றும் அதிகார திறனைக் கொண்டு தன்னைத் திணிப்பது தமிழ்நாட்டின் பொதுச் சமூகத்தில் இன்று நேற்று நிகழ்வதல்ல. அதில் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே பச்சைகுத்தப்பட்டுவிட்டார்கள். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இன்றளவும் அதே அறிவுசார் தளத்தில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தக் குற்றங்களுக்கெல்லாம் அவர்களை அறிவுசார்ந்து தண்டிப்பது, ஆயுள்தண்டனைக்குச் சமானம் எனத் தானாகவே பொதுமன்னிப்பு கொடுத்து கைகழுவிவிடப்படுகிறார்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள். மனரீதியாக, உடல் ரீதியாக பெண்களை குறுகச் செய்பவர்களுக்கு யார் மணி கட்டுவது? 


Also Read: இலங்கையுடனான உறவைத் துண்டிக்கவேண்டும் - சீமான்