ஜி20 உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ள நிலையில், இரவு குடியரசுத்தலைவர் அளிக்கும் சிறப்பு விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு
வளர்ந்த மற்றும் வளரும் 20 நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பாக இருக்கும் ஜி20 அமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அந்த அமைப்பின் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த ஜி20 கூட்டத்தில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இப்படியான நிலையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்று (செப்டம்பர் 9) மற்றும் நாளை (செப்டம்பர் 10) ஆகிய இரு தினங்கள் தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் பல நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், பல நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.
ஜி20 மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளுடன் சிறப்புடன் முடிவுற்று தயார் நிலையில் உள்ளது. முக்கிய தலைவர்கள் வருகையால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜெகநாத் உள்ளிட்ட விருந்தினர்களுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார்.
டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதனிடையே ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார். இன்று இரவு நடைபெறும் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அதன்படி முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அதேசமயம் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: G20 Summit 2023: இன்று தொடங்குகிறது ஜி 20 மாநாடு.. ஜோ பைடன் உட்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்பு.. உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி..!G20 Summit 2023: இன்று தொடங்குகிறது ஜி 20 மாநாடு.. ஜோ பைடன் உட்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்பு.. உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி..!