சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் ஜி20 சுற்றுசூழல் மாநாட்டில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 


இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி இந்த ஆண்டு மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த  டிசம்பர் 1-ஆம் தேதி அதிகாரப்பூர்வ முறைப்படி ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்துகிறது.


ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட  சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும். ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சினைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சினை, கடன்பிரச்சினை, கொரோனா தாக்கம், பொருளாதாரம், ஆரோக்கியம், வேளாண்மை, கலாசாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் திறன், எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முயலும். ஜி20 தலைமையின் போது, நாடு  முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளது.


இதில் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பேரிடர் பாதுகாப்பு மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்றது. இன்றுடன் இந்த மாநாடு முடிவடைந்தது. இந்நிலையில் இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஜி20 சுற்றுசூழல் மாநாடு ஏற்கனவே மும்பை, பெங்களூரு, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளது. இன்று தொடங்கும் மாநாட்டில் 135 பேர் பங்கேற்கின்றனர்.


ஜூலை 28 ஆம்  தேதி ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கு பெறும் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் ஜி20 நாடுகள் மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை மந்திரிகள் 35-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.