சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விடுதலைக்காக போராடி சிறை சென்ற கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 

கடலூர் முதுநகரில் 1890 ஆம் ஆண்டு பிறந்து காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சென்னையில் நீலன் சிலை அகற்றம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனை, உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை தண்டனை, சட்டம் மறுப்பு மறியல் போராட்டம் மற்றும் அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டத்தில் சிறை தண்டனை, தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில் சிறை தண்டனை என பல்வேறு முறை சுதந்திர போராட்டத்திற்காக சிறை சென்ற அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு இதன் திறப்பு விழா  நடைபெற்றது.



 

இந்த நிகழ்ச்சியில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவுருவ சிலையை திறந்துவைத்தார். தொடர்ந்து கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாள் சிலைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய கடலூர் அஞ்சலை அம்மாளின் புகழை போற்றும் வகையில் திருவுருவ சிலை அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கு அஞ்சலையம்மாள் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.