காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ளது பாக்ஸ்கான் நிறுவனம். கடந்தாண்டு இறுதியில் பாக்ஸ்கான் நிறுவனத்தில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையின் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பாக்ஸ்கான் குழும நிறுவனத்தின் செயல்துணைத் தலைவர் டாக்டர் ஆண்ட்ரூ லியூ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, பாக்ஸ்கான் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்ளிட்ட தமிழக அரசின் உயரதிகாரிகளும், பாக்ஸ்கான் தொழிற்சாலையின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
முன்னதாக, செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனமாக செயல்பட்டு வரும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பணியாளர்கள் திருவள்ளூரை அடுத்த தனியார் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி அவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், விடுதியில் பணியாற்றிய ஏராளமான பெண்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் நள்ளிரவில் திடீரென விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் நேரில் சென்று சமாதானம் செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய உணவுத்துறை அதிகாரிகள் விடுதியில் சமையலறைக்கு சீல் வைத்தனர். மேலும், பணியாளர்கள் தங்கியிருந்தது தனியார் கல்லூரியின் விடுதி என்பதால், கல்லூரி விடுதியில் அனுமதியின்றி தங்கவைக்கப்பட்டதற்கும் சேர்த்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்