44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த 28ஆம் தேதி வண்ணமையான தொடக்க விழாவுடன் தொடங்கியது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நிறைவு விழா தொடங்கியது  செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் சூட் உடன் வந்தார். அதன்பின்னர் நிறைவு விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இவரும் ட்ரம்ஸ் வாசித்தார்.


இந்நிலையில் கலைநிகழ்ச்சிகளுக்கு பிறகு நிறைவு விழாவில் இந்திய செஸ் ஜாம்பவான் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றினார். அதில், “கடந்த ஒரு மாதமாக சென்னை செஸ் விளையாட்டை சுவாசித்து வருகிறது. நேப்பியர் பாலம் முதல் பால் பாக்கெட் வரை செஸ் அனைத்திலும் இடம்பெற்று வருகிறது. நாங்கள் அனைவரும் செஸ் விளையாட்டை சுவாசித்து வருகிறோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக செஸ் உலகம் சென்னையை சுவாசித்து வருகிறது.


இந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தமிழ்நாட்டிற்கு கொண்டு சிறப்பாக அமைத்த தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்பிற்கு என்னுடைய நன்றி. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பல சிறப்பான ஆட்டங்கள் இருந்தன. நான் 2000 ஆம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற போது என்னுடைய அணியில் தற்போது உள்ள வீரர்கள் சிலர் பிறக்கவே இல்லை. ஆனால் தற்போது அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நான் செஸ் விளையாட்டை தொடங்கிய போது எனக்கு உலக சாம்பியன் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.


 






ஆனால் சென்னையும் செஸ் விளையாட்டு இந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. சென்னையும் செஸ் விளையாட்டும் தற்போது பிரிக்க முடியாத ஒன்று. நம்ம செஸ் நம்ம சென்னை” எனத் தெரிவித்துள்ளார்.


இதைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தனி நபர் போர்ட் பிரிவில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதன்பின்னர் மேலும் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண