இன்றைய சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார்.


பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி பயணம் செய்யலாம் என கூறியவர் கருணாநிதி. நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞர் கருணாநிதி. 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றியவர்.  5 முறை தமிழக முதல்வராக இருந்து 19 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர். இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாலும், பிரதமர்களாலும் பாராட்டப்பட்டவர் கருணாநிதி. அவருடையை பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும்” எனத் தெரிவித்தார். அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு நடுவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது எனக் குறிப்பிட்டார்.


மேலும், சட்டப்பேரவையில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் குறித்தும் முதல்வர் விளக்கம் அளித்தார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.


விக்னேஷ் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "விசாரணைக்கைதி விக்னேஷுக்கு வலிப்பு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை சந்தேக மரணமாக பதிவு செய்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. மாஜிஸ்திரேட் முன்பு விக்னேஷின் உடல்கூராய்வு நடைபெற்றது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவல் மரணங்கள் எப்போது நிகழ்ந்தாலும் அது முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நீதி வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டில் திமுக அரசு உறுதியாக உள்ளது" என்றார்.