ஒடிசா மாநில முன்னாள் கவர்னர் எம்.எம்.ராஜேந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை  அதாவது டிசம்பர் 23ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 88. இவருக்கு சுசீலா ராஜேந்திரன் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 1957 - ம் ஆண்டு எம்.எம். ராஜேந்திரன், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டு ஒடிசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஏற்பட்ட சூறாவளியைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மறுவாழ்வுகளை நிர்வகிப்பதற்கான தனது கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில் திறமையான மறுவாழ்வுத் திட்டத்தை அமைக்க ராஜேந்திரன் தமிழ்நாடு அரசுக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சுமார் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டில் பணிபுரிந்துள்ளார். 


இந்நிலையில் இவரது மறைவையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள குறிப்பில், ” ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றியவரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான திரு எம்.எம்.ராஜேந்திரன் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்


1957ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி. இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகவும், ஒன்றிய அரசின் செயலாளராகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி இந்திய ஆட்சிப் பணியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில ஆளுநராக செவ்வனே மக்கள் பணியாற்றியவர் எம்.எம். ராஜேந்திரன்.


உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அண்ணாரின் மறைவு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர். உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.எம். ராஜேந்திரன் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களால் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது சேவைகளைப் போற்றும் வகையில், காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 


ஒடிசாவில் ஆளுநராக இருந்தபோது, மறைந்த எம்.எம். ராஜேந்திரன், கிரிதர் கமாங், ஹேமானந்தா பிஸ்வால் மற்றும் நவீன் பட்நாயக் உள்ளிட்ட மூன்று முதல்வர்களுடன் பணியாற்றியுள்ளார். ஒடிசாவின் முன்னாள் ஆளுநரான எம்.எம். ராஜேந்திரனின் மறைவுக்கு தற்போது ஒடிசாவின் தற்போதைய ஆளுநர் ரகுபர் தாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 


அதேபோல் ஒடிசாவின் முதலமைச்சரான நவீன் பட்நாயக் தனது  இங்கல் பதிவில், “ஒடிசாவின் முன்னாள் ஆளுநராக இருந்த எம்.எம்.ராஜேந்திரனின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஒரு துணிச்சல்மிக்க அதிகாரியாக அவர் பணியாற்றியது அவரது நீண்ட வருட அனுபவம் உள்ளிட்டவை அவருக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியது. மக்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்.  அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.