சென்னை நந்தனத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் மீட்போம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போதைய பா.ஜ.க. நிர்வாகியுமான விஜயதாரணியும் பங்கேற்றார்.


பிரதமருக்கு பாராட்டு:


இதில் பங்கேற்று பேசிய விஜயதாரணி, தேசிய அளவில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் உலக நாடுகளே பிரம்மிக்கும் அளவிற்கு உள்ளது. உலக நாடுகள் நடத்தும் போர் எதுவாக இருந்தாலும் அதை தட்டிக்கேட்கும் இடத்தில் மட்டுமல்ல, சமாதானப்படுத்தும் இடத்திலும் பிரதமர் மோடிதான் உள்ளார். இதில் இரு வேறு கருத்து இருக்க இடமில்லை.


விஸ்வகுருவாக இந்தியாவை மாற்றும் இடத்தில் பிரதமரின் உழைப்பு யார் நகையாடினாலும் அதை துச்சமாக மதித்து அவர் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். நாட்டை உயர்த்திப்பிடிக்கிறார். பிரதமர் யூனிபார்ம் சிவில் கோட் வருவதில் தெளிவாக இருக்கிறார்.


பதவி தேவை:


3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் நான். இன்னும் இரண்டரை ஆண்டுகள் பதவியையும் விட்டுவிட்டு பா.ஜ.க.வில் இருக்க வேண்டும் என்று வந்துள்ளேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை. எதிர்பார்ப்புகளுடன்தான் வந்துள்ளேன். எல்லாரும் அப்படி நினைத்திருந்தால் தவறு.


நன்றாக உழைக்க வேண்டும். கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் வந்துள்ளேன். அதற்கு என்ன தேவை? ஏதாவது ஒரு பதவி தேவை. 6 மாதம் ஆகிவிட்டது. பிரச்சினை இல்லை. நீங்கள் எல்லாம் பேசி எனக்கு ஒரு நல்லது பண்ணுங்க. நிச்சயமாக பா.ஜ.க. பயன்படுத்தும். நியாயத்தின் பக்கம் மட்டுமே நான் நிற்பேன்.


அண்ணாமலை எப்போதும் என்னிடம் உங்களைப் போல தியாகம் செய்துவிட்டு, நமது கட்சியில் யாரும் இல்லை. நிச்சயமாக உங்களுக்கு என்ன உண்டோ அந்த அங்கீகாரம் வரும். உங்களை கட்சி சரியாக பயன்படுத்தும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கு ரொம்ப நம்பிக்கை. நிச்சயம் கட்சி என்னைப் பயன்படுத்தும்.”


இவ்வாறு அவர் பேசினார்.


காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு விளவங்கோடு எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்ததை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், கட்சியில் இணைந்து 6 மாதம் ஆகியும் பதவி வழங்கப்படாத ஆதங்கத்தை கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படையாக விஜயதாரணி வெளிப்படுத்தியுள்ளார். இது தமிழக பா.ஜ.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தனக்கு பதவி வழங்கப்பட வேண்டும் என்று விஜயதாரணி வெளிப்படையாக மேடையிலே கேட்டபோது அண்ணாமலை சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார்.