நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் இவர் முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின் உறவினர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர் சரோஜாவிற்கு உதவியாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சரோஜா அமைச்சராக இருந்தபோது சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதற்காக 18 பேரிடம் தான் 75 லட்சம் பணம் வசூல் செய்து அவரிடம் கொடுத்ததாகவும், ஆனால் இதுவரை அவர் பணியும் வழங்கவில்லை, கொடுத்த பணத்தை திரும்பவும் தரவில்லை எனவும், தான் மற்றவர்களிடம் வசூல் செய்து கொடுத்த 75 லட்சம் ரூபாய் பணத்தை முன்னாள் அமைச்சர் சரோஜா மோசடி செய்துவிட்டதாகவும், அந்த பணத்தை திரும்ப பெற்று தரவும் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் சரோஜா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவினர் சரோஜா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில்வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேவேளையில் சரோஜாவும், அவரது கணவரும் தலைமறைவானதாக தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் முன் ஜாமின் கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த நிலையில்நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுள்ளார் சரோஜா. முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதால் மனுவை சரோஜா மனுவை திரும்பப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தப்புகார் குறித்து பேசிய உதவியாளர் குணசேகரன்,
''நான் 20 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் உதவியாளராக இருந்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் சரோஜா புதிய வீடு கட்டுவதற்கு பணம் தேவை படுவதாகவும் அதற்கு சத்துணவு துறையில் வேலை வாங்கி கொடுத்துவிடலாம் பணம் வசூல் செய்யும்படி கூறியதாகவும் அதன் காரணமாக 18 பேரிடம் 75 லட்சம் பெற்று அமைச்சர் சரோஜாவிடம் கொடுத்ததாகவும் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் பணம் கேட்டதாகவும் அதற்ககு அவர் பணம் கொடுத்தற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறி முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததால் உயிர் பயத்தில் ராசிபுரம் போலீசில் புகார் அளித்ததாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் சரோஜா மீது அவரது உதவியாளராக இருந்த அவரது உறவினரே புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக நலத்துறையின் கீழ் வரும் சத்துணவு அமைப்பாளர் பொறுப்புகளை பணம் பெற்றுக்கொண்டு ஆட்களை நியமித்ததாகவும், சத்துணவு திட்டத்திற்கான முட்டை மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்குவதற்கு டெண்டர்கள் வழங்குவதில் முறைகேடு நடந்ததாகவும் அதிமுக ஆட்சிகாலத்திலேயே முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.