சபரிமலை சீசன் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற 4 மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்னி பேருந்துகள் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என கரூரில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தங்கவேலுவை சந்தித்து மனு அளித்தார். மனு அளித்த பிறகு ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் SIR திருத்த விண்ணப்பங்களை (BLO) அதிகாரிகள் விநியோகம் செய்யவில்லை, அவர்களுக்குப் பதிலாக திமுகவினரே விநியோகம் செய்கின்றனர். ஓய்வு பெற்றவர்களை BLOக்களாக போட்டுள்ளனர். அவர்களால் பணி செய்ய முடியவில்லை. BLOக்களே திமுக தலைவர்கள் படம் அச்சிடப்பட்ட பையில் கொண்டு வந்து விண்ணப்பங்களை விநியோகம் செய்கின்றனர். இது போன்று செயல்பட்டால் SIR திருத்தம் சரியாக நடைபெறுமா, 2002ல் இங்கு வசித்தவர்கள் வெளியூர் சென்று விட்ட நிலையில் திமுகவினர் அவர்களுக்கு இங்கேயே வாக்குகளை சேர்க்க முயற்சி செய்கின்றனர் என புகைப்பட ஆதாரத்துடன் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களை சேர்ந்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்திற்குள் வரும்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக கேரளா போன்ற மாநிலங்கள் நமது மாநிலத்தைச் சேர்ந்த பேருந்துகளுக்கும் புதிதாக தற்போது கட்டணங்களை வசூலித்து வருகின்றன. இதனால் நடைபெறும் ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சபரிமலை சீசன் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற 4 மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. லாரிகள் மூலம் ஒரு நாளைக்கு 50 லட்சம் முதல் 1 கோடி வரை மணல் கொள்ளை போவதாகவும், இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.