கரூர், ஆண்டாங்கோவில் பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை அதிகாரிகளுடன் சென்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.




 


கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளில் வடிகால் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மழை நீர் வடிகால் முறையாக கட்டி முடிக்காமல், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 


 


 




 


இதனால் ஆண்டாள் கோவில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட சஞ்சய் நகரில் மழைநீரும், கழிவுநீரும் வெளியே செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீரும் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும், தேங்கி நிற்கும் நீரில் கொசுப்புழு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் மழை நீர் வடிகால் கட்டும் பணியினை முறைப்படுத்திய பின்னர் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


 


 




 


ஆண்டாகோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணியை முழுமையாக முடித்த பின்னரே, ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் வடிகால் பணியை தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கின் அடிப்படையில் வடிகால் பணியை சரிவர செய்ய வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தாந்தோணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் உதவி பொறியாளர் ஆய்வு செய்தனர்.