ஒரு நீதிபதி நீதிமன்ற வளாகத்தில் நடந்துவரும் பொழுதே அங்கிருக்கும் மற்றவர்கள் ஒரு நிமிடம் தலை குனிந்து மரியாதை செலுத்துவார்கள். ஒருவரின் தலை எழுத்தையே மாற்றும் வல்லமை அவர்களின் தீர்ப்பிற்கு, நீதி வழங்கும் பேனாவுக்கும் இருக்கிறதல்லவா!


சேறு தோய்ந்த ஆடை, அலப்பறை இல்லாத பேச்சு , கிராமத்து வாசம் என முழு விவசாயியாகவே மாறி பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. செல்வம். 




உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதியாக மக்கள் பணியாற்றிய ஏ.செல்வம் அவர்கள் தற்போது  ஓய்வுக்குப் பிறகு சொந்த கிராமமான பூலாங்குறிச்சியில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஊர் மீது அதீத பற்றுகொண்ட இவர் கடந்த ஆண்டு கூட வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் பூலாங்குறிச்சி பகுதியில் இருக்கும் உருமான் சாமி  கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமல் 225 அடி தூரத்திற்குத் தார்ச்சாலை அமைத்துள்ளனர் என்றும் இந்த தார்ச் சாலையை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


அவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் 30 நாளில் அகற்ற உத்தரவிட்டிருந்தது. இது தவிர கருவேல மரங்களை அகற்ற கோரி போராட்டம் என  சட்டத்தால் தனது ஊருக்கு என்ன நல்லது செய்ய முடியுமோ அதனை தனது ஓய்வு நாட்களிலும் செய்து வருகிறார்.




சமீபத்தில் Behindwoods யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த , ஏ.செல்வம் அவர்கள் “ எளிமையாக இருக்கிறேன் என்பார்கள். நான் என்ன கோட்-சூட் போட்டுக்கொண்டா விவசாயம் செய்ய முடியும். ஆடம்பர கார் , பகட்டான வாழ்க்கை என இருந்தால் நிம்மதியாக தூக்கம் வராது. கார் வெளியே நிற்கும் கஷ்டம் வீட்டிற்குள் போய்விடும். என் வயல்தான் இது. நான் சம்பாதித்து வாங்கவில்லை, பூர்வீகமானது. என் வயலின் அனைத்து வேலைகளையும் நான்தான் செய்கிறேன்.


2018-ஆம் ஆண்டு இறுதியாக கையெழுத்து போட்டுவிட்டு பேனாவை சேம்பரில் போட்டுவிட்டு வந்தேன். அதன் பிறகு பேனா , புத்தகம் எதையும் தொடவில்லை. நான் பணியில் இருந்த காலத்தில் யாரிடமும் ஆலோசனை பெற்றது கிடையாது. எனக்கு நியாபக சக்தி அதிகம் நானே எல்லாவற்றையும் கையாளுவேன்.  வீட்டிற்கு வெளியே இலவச சட்ட ஆலோசனை கிடையாது என போர்ட் வைத்திருக்கிறேன். காரணம் நாம் உதவி என செய்தால் , அவர்கள் நீதிபதிகளிடம் ரெக்கமெண்ட் செய்ய சொல்லி கேட்கிறார்கள்.


அதனால்தான் பணம் என்றால் யாரும் வரமாட்டார்கள் என போர்ட் வைத்துவிட்டேன். பென்ஷன் எனக்கு போதும். எனக்கு பணத்தின் மீது ஆசை இல்லை. கோவணத்தில் இருந்து கோர்ட்... கோர்ட்டில் இருந்து கோவணம் அவ்வளவுதான்.“ என ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் மனிதர்