தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organisation (ISRO) இந்திய செயற்கை கோள்களைகளையும், பிற நாடுகள் தயாரிக்கும் செயற்கை கோள்களையும் ஸ்ரீஹரிகோட்டாவில் (ஆந்திரா) உள்ள ஏவுதளங்களில் இருந்து விண்ணுக்கு செலுத்தி வருகிறது. இங்கு இரண்டு ஏவுதளங்கள் உள்ளன.
விண்வெளி ஆய்வுகளில் நாட்டின் எதிர்கால தேவை, செலவினம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்தியாவிற்கு மற்றொரு ஏவுதளம் அவசியமாகிறது. அதன்படி, புதிய ராக்கெட் ஏவுதளம் விரைவில் அமைய இருக்கிறது.
இதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள், தென் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட கடலோர பகுதிகளை ஆய்வு செய்தனர். இறுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு பகுதிக்கு மிக அருகில் உள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கலாம் என்று முடிவு செய்தனர். பின்னர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து, குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதில் மத்திய அரசு இறுதி முடிவு எடுத்தது.
இந்நிலையில், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. சிவன், ’குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் ஒப்புதல் அளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அங்கு மிக விரைவில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடியும். கொரோனா தொற்று பரவல் இஸ்ரோவின் செயல்பாடுகளை கடுமையாக பாதித்துவிட்டது. இருப்பினும், இந்தக் காலம், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு பல்வேறு புதிய வழிமுறைகளை கொடுத்துள்ளது. அதை எதிர்வரும் புதிய திட்டங்களில் செயல்படுத்தப்படும்.’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு புதிய ஏவுதளம் அமைப்பதற்காக, தூத்துக்குடியில் 961 ஹெக்டர் பரப்பு நிலத்திற்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்