கொடநாடு கொலை வழக்கில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக செயல்படுவதை  கண்டித்து  ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக அமமுக தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், ”கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 01.08.2023 அன்று நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. தேனியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்வார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், “இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மிகவும் நேசித்த இடமான கோடநாட்டில், அவரது மறைவிற்குப் பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத வகையில் மெத்தனப் போக்கோடு தூங்கி வழியும் தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கண்டன ஆர்பாட்டங்களை நடத்த உள்ளனர்.


இக்கண்டன ஆர்பாட்டத்தில் அந்தந்த கழக மாவட்டத்தைச் சார்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக  ஓ.பன்னீர்செல்வம்  அணியினருடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.