தமிழகத்தில் கொரோனா பரவல் தினசரி 30 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும், உயிரிழப்பு தினசரி அதிகரித்தே காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் பெற்றோர்கள் இருவரும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களையே நம்பியுள்ள அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. இதனால், அந்த குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கும், எதிர்காலத்திற்கும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.


இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளின் பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு என பட்டப்படிப்ப வரையிலான அனைத்து கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்றும், அவர்களின் பெயரில் வங்கியில் ரூபாய் 5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்றும் அந்த தொகை அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் அவர்களிடம் வட்டியுடன் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.






எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”






என அவர் பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அந்த அறிவிப்பின்படி, குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்கும் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படவுள்ளது.