OPS On BJP: "நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு தான் எங்களது ஆதரவு" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


விஜயகாந்திற்கு ஓபிஎஸ் இரங்கல்:


சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "விஜயகாந்த் சிறந்த திரைப்பட நடிகர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்று சிறப்பாக பணியாற்றினார். அனைத்து மக்களிடமும் அன்பாக பழகக் கூடியவர்,  ஏழை, எளிய மக்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர். தென் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து தனது கடின உழைப்பால் உயர்ந்து, நடிப்பு துறையில் இடம் பெற்றவர். 
தேமுதிக அரசியல் கட்சியாக துவக்கி சட்டமன்ற வரலாற்றில், எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்து நின்றவர். இப்படி நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து அனைத்து நடிகர், நடிகைகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர். பல நிலைகளில் தனது கடின உழைப்பால் உயர்ந்து நிலைக்கு வந்தவர் அருமை சகோதரர் அண்ணன் விஜயகாந்த் மறைவு எங்களுடைய கழக உரிமை மீட்பு குழு சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தேமுதிக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரேமலதாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா இறைவனுடைய திருவடி நிழலில் அமைதி கொள்ளவேண்டும் என்று இதய பூர்வமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்கத்தின் சார்பாக அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்துவோம் என்று அஞ்சலி செலுத்தினர்‌. விஜயகாந்த் உடைய மறைவிற்கு நேரடியாக அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்காக கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கூட்டம் நடைபெறுவதாக இருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


படுகுழியில் தள்ளிய ஈபிஎஸ் - ஓபிஎஸ்


அதிமுக சொத்துக்கள் விற்பவர்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அது எம்ஜிஆர் தொண்டர்களுக்காக சேமித்த சொத்து அதனைப் பாதுகாக்க வேண்டும். கலைஞர் கருணாநிதி காலத்தில் போடப்பட்ட வழக்கு என் மீது உள்ளது. நீதிமன்றத்தில் என்னுடைய வாதங்களை எடுத்துரைக்க உள்ளேன். இதனால் எடப்பாடி பழனிசாமி மீது சொல்லப்பட்ட ரகசியம் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லுவோம். அதிமுகவில் மீண்டும் எடப்பாடியுடன் சேரமாட்டேன். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்ஜிஆரை விளக்கிய போது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே அவருடன் இருந்தார்.  முழுமையாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் கலைஞர் கருணாநிதி இருந்தார்.  அதனை மீறியும் மக்களின் ஆதரவோடு, தொண்டர்களின் சக்தியோடு எம்ஜிஆர் எழுந்து நின்றார். எடப்பாடி பழனிசாமி கட்சியை படுகுழியில் தள்ளிவிட்டார். 


யாருடன் கூட்டணி?


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உடன் கூட்டணி வைத்திருந்தோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு தான் எங்களது ஆதரவு. ஏற்கனவே டிடிவி தினகரனும் நாங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம் சின்னம்மா வருகையை ஒட்டி நாங்கள் காத்திருக்கிறோம்" என்று கூறினார்.