2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் களம் காண தயராகி வருகிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்நிலையில் விஜய் பிரச்சார பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. விஜய்யின் சுற்றுப்பயணம் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடபைெறுகிறது. அவரது மொத்த சுற்றுப்பயணமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடக்கிறது. செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் நடைபெறும். அதன் பிறகு வரும் 20ஆம் தேதி நாகை, திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்
அக்டோபர் 4ஆம் தேதி, அக்டோபர் 5ஆம் தேதியும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அது போல் அக்டோபர் 11 ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், அக்.25 ஆம் தேதி தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதல் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார். இதுவரை செய்தியாளர்களை சந்தித்து பேசியதில்லை. இதனால், அவரை எதிர்க்கட்சிகள் வொர்க் ப்ரம் ஹோம் பாலிடிக்ஸை விட்டு வெளியே வர வேண்டும், பொதுமக்களின் பிரச்னைக்கு குரல் கொடுத்தால் தான் அரசியல் தலைவரின் செயலுக்கு அழகு என்று விமர்சித்து பேசினார்கள். ஆனால், அவரது பரப்புரை அட்டவணையும் தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அண்ணாமலை விமர்சனம்
இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, விஜய்யை விமர்சித்து பேசினார். அதில், மாற்று சக்தி என்று கூறும் விஜய் 24 நேரமும் களத்தில் இருந்தால் தான் திமுக பயப்படும். வாரத்தில் சனி, ஞாயிறு மட்டும் தான் பிரச்சாரத்திற்கு வருவேன். வார விடுமுறையில் தான் அரசியல் செய்வேன் என்றால் பொறுப்புமிக்க அரசியல் தலைவருக்க அழகல்ல. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திமுகவிற்கு எதிரி தவெக என்று சொல்கிறார்கள், அதனை களத்தில் வேகப்படுத்தினால் மட்டுமே மக்கள் நம்புவார்கள். அரசியலில் ஈடுபடுவர்கள் முழு நேரமும் மக்களுக்காக இருக்க வேண்டும். தவெக தலைவர் அரசியலை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்கிறாரா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.