முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவை பரபரப்பாக வைத்துள்ளார். அனைத்து மீடியாக்களின் கண்களும் செங்கோட்டையன் பக்கம் திரும்பி இருக்கின்றன.
அதற்கு காரணம் இபிஎஸ் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழை மறைத்து இபிஎஸ் மேல் வருவதற்கு துடிப்பதாகவும் எழும் குற்றச்சாட்டுகள் அதிமுகவை கதிகலங்க வைக்கின்றன.
அந்த வகையில் அதிமுக நிகழ்ச்சியில் உள்ள பேனரில் இபிஎஸ் படம் இடம்பெற்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாமல் இருந்தது செங்கோட்டையனை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. இதையடுத்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லாமல் இங்கு நாம் இல்லை என்பதை உணர்ந்த செங்கோட்டையன், இபிஎஸ்க்கு மறைமுக எச்சரிக்கையும் அறிவுறுத்தல்களையும் வழங்குவது போன்ற கருத்துக்களை கூறி வந்தார்.
அத்திக்கடவு அவினாசி திட்ட விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பேனரில் எம்.ஜி.ஆர் புகைப்படமும் ஜெயலலிதா புகைப்படமும் இடம் பெறவில்லை. இதனால் கோபமடைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அந்த விழாவையே புறக்கணித்தார். அதேபோல் டெல்லியில் அதிமுக தலைமை அலுவலகம் திறப்பு விழாவையும் புறக்கணித்தார். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து செங்கோட்டையன் தனி அணியை அதிமுகவில் உருவாக்க போகிறாரோ என்ற பேச்சும் நிலவியது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் செங்கோட்டையன்.
இதனிடியே, மத்திய அரசின் செயல்பாடுகளை கவனிக்க, நடைமுறைப்படுத்த மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இந்த குழுவில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருப்பர்.
அந்த வகையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில்தான், இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதேபோல் விசிகவின் திருமாவளவன், பாமகவின் அன்புமணி ராமதாஸ், மதிமுகவின் துரை வைகோ, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவிற்கு செல்லாமல் முதல்வர் தலைமையிலான குழுவுக்கு மட்டும் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் மாநில வளர்ச்சி குழுவில் நானும் உறுப்பினர். அந்த முறையில் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டும் நான் கலந்து கொண்டேன் என தெரிவித்திருந்தார்.