தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் சக்கரபாணி. இவர், டெல்லி உத்யோக் பவனில் உள்ள மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர், சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
“தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகை ரூபாய் 5 ஆயிரத்து 231 கோடியை உடனடியாக வழங்குமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கேட்டுக்கொண்டேன். இதுதொடர்பாக, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்த அமைச்சர், அந்த தொகையை விடுவிக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து அவற்றை தனியார் அரவை முகவர்கக்கு அனுப்பி வைக்கிறது. இதன்படி, மத்திய அரசு கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பச்சரிசி குவிண்டாலுக்கு ரூபாய் 10, புழங்கல் அரிசி குவிண்டாலுக்கு ரூபாய் 20 வழங்கி வருகிறது. இதை உயர்த்தி பச்சிரிசி, புழுங்கல் அரிசிக்கு முறையே குவிண்டால் ரூபாய் 60, ரூபாய் 100 என வழங்க வேண்டும்.
வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழக அரசு 1 கிலோ அரிசி ரூபாய் 20 என்ற விலையில் மத்திய அரசின் இந்திய உணவுக்கழகத்திடம் இருந்து வாங்குகிறது. இதை கிலோவுக்கு ரூபாய் 15 ஆக குறைத்து தர வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை மாநில அரசு வெளிச்சந்தை விலையை விட குறைவாக வழங்கி வருகிறது. தேவையான துவரம் பருப்பை வழங்க தேசிய வேளாண் கூட்டுறவு சம்மேளனத்திற்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம்.
தமிழ்நாட்டில் காரீப் பருவத்தில் நெல் கொள்முதல் செய்யும்போது, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால், நெல் கொள்முதலில் 17 சதவீதம் ஈரப்பதம் என்பதை 20 சதவீதமாக உயர்த்தித் தர கோரப்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த ஐந்து கோரிக்கைகளையும் மத்திய அமைச்சர் நிறைவேற்றித் தருவார் என நம்புகிறேன். அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாக பிரித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் ஒரு நெல்மணி கூட மழையில் நனைந்து வீணாகிவிடக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.