’மாஃபாய் பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. பொருளாதாரம் தெரியாதவர்களுக்கு எல்லாம் என்னால் விளக்கம் கொடுக்க முடியாது’ என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு அண்மையில் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. அதுகுறித்து கருத்து கூறியிருந்த அதிமுக.,வின் மாஃபாய் பாண்டியராஜன் தமிழ்நாட்டில் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பதால்தான் கடன் தொகையும் அதிகமாக இருக்கிறது’ எனக் கூறியிருந்தார். இதனைக் குறிப்பிட்டு செய்தியாளர் ஒருவர் நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ‘மாஃபாய் பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பாண்டியராஜனின் சட்டமன்ற கன்னிப்பேச்சில் ‘உறுப்பினர் ஏ.வ.வேலு ஏழாவது நிதிக்குழுவுக்கான ஊதிய ஒதுக்கீடு பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ’ஏ.வ.வேலு கேட்ட கேள்வி பொறுப்பற்றது’ என விளக்கமளித்தார். அதே பாண்டியராஜன்தான் நிதிப்பற்றாக்குறை குறித்த கேள்விக்கு விளக்கமளிக்கையில் ‘ஏழாவது நிதிக்குழுவுக்கு ஊதியத்தை ஒதுக்கியதுதான் பற்றாக்குறைக்குக் காரணம்’ என விளக்கமளித்தார். நீதிக்கட்சி காலத்திலிருந்து கொண்டுவந்த சீர்திருத்தத்தால் தமிழ்நாடு வளர்ந்திருக்கு. இதெல்லாம் மாஃபாய் பாண்டியராஜனுக்கு எப்படித் தெரியும். பொருளாதாரம் தெரியாதவர் கேட்கும் கேள்விக்கெல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது. ஒரு ரூபாய் கடன் வாங்கினோம் ஐம்பது பைசா முதலீடு செய்தோம் என எடப்பாடி பழனிசாமியே சொல்லியிருக்கிறார். பிறகு எப்படி மாஃபாய் மறுக்க முடியும்?. அம்மையார் ஜெயலலிதாவின் ‘தொலைநோக்குப் பார்வை திட்டம் 2023’ என அறிவித்தார். அதைக்காட்டிதான் மக்களிடம் ஓட்டு வாங்கினார்கள். அதற்காக 3 சதவிகிதக் கடன் மூலதனத்துக்காக மட்டும் வாங்கியதாக ஜெயலலிதா சொல்லியிருந்தார். ஆனால் 6 சதவிகிதம் முதலீடு செய்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார். முதலீட்டில் ஒன்றரை சதவிகித உபரி பற்றாக்குறை ஆகிவிட்டது என முன்னாள் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். இதுதான் பொறுப்பான மேலாண்மையா? மறைந்த அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் கூட இதுமாதிரி சூழ்நிலை இல்லை. மகாராஷ்டிரா குஜராத்தில் கூட இந்த நிலை இல்லை.ஜெயலலிதா அறிவித்தத்தில் எது நிறைவேற்றப்பட்டிருக்கு என எனக்கே தெரியலை. வெள்ளை அறிக்கையில் கொஞ்சம்தான் வெளியிட்டிருக்கோம். இன்னும் வரும்.
எங்க முதல்வரின் நான்கு அறிவுரைப்படிதான் தற்போது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கு.
1. தகவல் முழுவதும் திரட்டி நீங்களே புரிந்துகொள்ளுங்கள்
2. புரிந்துகொண்டதை மக்களிடம் சென்று சேருங்கள். அதைப்பற்றி விவாதம் நடக்கட்டும்
3. அந்த விவாதத்தின் மூலம் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டறியுங்கள். அதில் என்ன செய்யலாம் எனத் தேர்வு செய்யுங்கள்
4. அதன் பிறகு செயல்படவும்.
என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.அதன்படிதான் நான் செயல்படுகிறேன்.
மேலதிகமாக எந்தக் கேள்வி இருந்தாலும் நாளை(13/08/2021) பட்ஜெட் வந்த பிறகு பார்த்துட்டு சொல்லுங்கள்’ என்றார்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுமா என பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இல்லை எனத் தலையசைத்துவிட்டுச் சென்றார் நிதியமைச்சர்