சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர் கீதா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, நாகப்பட்டினம், திருச்சி, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.




வரும் 14-ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை பதிவாகும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 3-ஆம் தேதி தொடங்கியது முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாகவே மாநிலத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாகவே மாலை, காலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், சென்னையில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.