பூண்டி ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, எறையூர் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், சீமாவரம், இடையான்சாவடி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படவுள்ளது. பூண்டி ஏரி அதன் மொத்த அடியான 35 அடியில் 34.05 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 1,290 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
சென்னை மற்றும் புற நகர் பகுதியில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பிற்பகல் 1 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, கோவை, திருப்பூர், நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கள்ளக்குறிச்சி கோமுகி அணையில் இருந்து 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் கனமழையால் கோமுகி அனையில் நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.